Monday, August 10, 2009

Creativity / Recycle

என்ன மக்கா எல்லாரும் நல்லா இருக்கீங்கல்ல...நல்லா தான் இருப்பீங்க...

இந்த பக்கம் எட்டி பார்க்க கூட நேரம் இல்ல.....கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க...பதிவு போடுறதையும் பின்னூட்டம் போடுறதையும் முழு நேர வேலை ஆக்கிடுறேன்...
உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்லீங்க...ஊர்ப்பட்ட ஆணியை , துருப்புடிச்ச ஆணியை செம்மை பார்த்துட்டு இருக்கேன் ... .அதுனால மக்கள் எல்லாம் தயவு செஞ்சு கோச்சுக்க கூடாது சரியா....


இதுல நான் பெத்த மகராசி வீட்டுக்கு வந்து ஒரு ஆசைக்கு கணினியை தொட்டா கூட.....என்ன செய்யுற....ஏன் செய்யுற....எதுக்கு செய்யுற.. நீ மட்டும் தான் செய்வியா....நான் செய்ய கூடாதா...அது ஏன்?.....இம்புட்டு கேள்விக்கு பயந்து நான் அந்த பக்கம் தலை கூட வச்சு படுக்கலைங்குறேன்....

சரி இப்போ மட்டும் என்னத்துக்கு வந்தன்னு கேக்குறீகளா...
சும்மா நம்மளை யாரவது சுகம் விசரிசுருக்காகலன்னு எட்டி பார்த்தா, புதுசா நாலு பேரு நலம் விசரிச்சுருந்தங்க...என்னடா அதிசயமா இருக்கேன்னு அலசிப் பார்த்தா தான் தெரிஞ்சது,.....நம்ம பழமை அண்ணாச்சி நம்மளை அறிமுகம் செஞ்சு வச்சுருக்காக...வலைசரத்துல....நல்லதுங்கன்னே...


சரி வந்தததுக்கு தலைப்புக்கு ஏத்த மாதிரி என்னத்தையாவது சொல்லனும்ல..சொல்லிட்டு போறேன்...
நம்ம மக்கள் creativity-க்கு ஒரு அளவே கிடையாதுங்க.....நான் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் வெறும் வாயை மெல்லுறது கிடையாது....அட..வாயில சூயிங்கம் போட்டு தான் மெல்லுவென்னு சொல்றேன்...
ஊர்ல இருக்கும் பொது நான் சூயிங்கும் திங்கும் போதெல்லாம் பக்கத்து வீட்டு ஆச்சி வந்து..."தாயீ...நீ நல்லா மென்னுட்டு துப்பிடாத...எனக்கு குடு தாயீ" அப்படிம்பாக....ச்சே....அது எதுக்கு உங்களுக்குன்னு கேட்டா...பிளாஸ்டிக் குடத்துல சின்ன ஓட்டை இருக்கு....ஓட்டை அடைக்குறவன் அஞ்சு ரூவா சொல்லுவான்.....இந்த சூயிங்கம் ஒரு நாலு நாள் தாங்கும் தாயீ...அதான் கேட்குறேன்ம்பாக.....அட..இது கூட நல்லா இருக்கே.....


ஏத்தா ஆச்சி...நான் உனக்கு புதுசா ஒன்னு வாங்கி தரேன்...நீயே மென்னு நீயே ஒட்டிக்கோன்னு சொன்னேன்.....அதுக்கு அவங்க ..எ போடி கிருக்கச்சி...நானே பல்லு இல்லாத கிழவி..நான் எப்போ அத மென்னு...துப்பி...;போ...கீழ போடுற கழுதைய என்கிட்டே குடுன்னா...குடுத்துட்டு போயேன்....
எல்லாம் என் நேரம்த்தா..என் நேரம்...ஐயோ, கிழவி நம்ம எச்சியை கைல தொட வேண்டாம்னு பார்த்த நீ ரொம்ப தான் பேசுற...சரி இந்தா போ.....அறையும் குறையுமா தின்ன சூயிங்கம் ஒரு நாலு நாள் அவங்க குடத்துல ஓட்டிகிட்டு இருந்துச்சு.....
என்ன இதை Creativity-ன்னு சொல்றதா...இல்ல Recycling-நு சொல்றதா...நீங்களே சொல்லுங்க
வந்ததுக்கு ஏதோ மொக்கைய போட்டாச்சு..வர்ட்டா


வெறும் வாயை மென்னபடி
பொன்னாத்தா


Wednesday, June 24, 2009

வாய் சொல்லில் வீரரடி...


"அவன் நல்லாவே இருக்க மாட்டான்.." இப்படி நீங்க யாரையாவது திட்டி இருக்கீங்களா?..நான் திட்டினேன்..

ஊருக்கு போயி ரெண்டு வாரமும் எந்த ஒரு தொல்லையும் இல்லாம சந்தோஷமா தான் போச்சு. எல்லாருக்கும் ஒரு வருஷம் கழிச்சு பார்ப்போம்னு கண்ணீரும் கம்பலையுமா TATA சொல்லிட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கும் பிரச்சனை இல்லாம வந்து சேர்ந்தாச்சு..

பயண சீட்டு வாங்கும் போது, சரி.... யாருக்கோ போக போற காசு இந்திய அரசாங்கத்துக்கு போகட்டுமேன்னு "AirInida -ல வாங்கினோம்.
.இந்தியாவில போயி இறங்கி .மும்பை விமான நிலையத்து பார்த்ததும் ஆஹா என்னடா இது மீன் சந்தை மாதிரி இருக்கே..தப்பு பண்ணிட்டோமோன்னு இருந்துச்சு ..

திரும்பி போகும் பொது எனக்கும் கணவருக்கும் என்னமோ தப்பு நடக்க போகுதுன்னு தோணிட்டே இருந்துச்சு///

எங்களுக்கு பெங்களூருல இருந்து மும்பை போயி சேர்ர விமானத்துக்கும் நியுயார்க் கிளம்புற விமானத்துக்கும் நடுவில மிக குறைந்த நேரமே இருந்துச்சு...சரி நம்ம ஆளுங்க ஜமய்ச்சுடுவாங்க..நம்மளை நேரா கொண்டு போயி உக்கார வச்சுடுவாங்கன்னு பெரிய நம்பிக்கைல மும்பைல போயி இறங்கினோம்..

இறங்கினதும் நியுயார்க் போற பயணிகள்னு பெரிய பெயர் பலகை வச்சுகிட்டு நின்னாங்க..அட..இங்க பாருடா வரவேற்ப்பைன்னு நினச்சுகிட்டு "WE are flying to NY"-நு பீட்டர் விட்டேன்..

Oh நீங்க தான அது..உங்க விமானம் கிளம்பிடுச்சு..அதுனால நீங்க நாளைக்கு தான் போக முடியும்னு அந்த குண்டு அம்மணி தினாவட்டா சொல்லுச்சு..

எனக்கு சொல்லியா குடுக்கனும....விர்ர்னு ஏறுச்சு...இது என்ன கொஞ்ச கூட பொறுப்பு இல்லாம ரொம்ப ஈசியா சொல்ற...இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எனக்கு தெரியாது..என்னை எப்டியோ கொண்டு போயி சேருன்னு சொன்னேன்.

என்னாச்சுன்னா ...சென்னை அல்லது பெங்களூர்ல இருந்து போகும் பொது உங்களை ஒன்னு Domestic இல்லன்ன International விமான தளத்துக்கு கொண்டு போவாங்க.....நாங்க பயண சீட்டு வாங்கும் போதே 78 தடவை கேட்டோம்...எங்க போகுதுன்னு....எல்லாவனும் சொல்லிக் குடுத்த மாதிரி உங்க விமானம் International தான் போகுதுன்னு சொன்னானுங்க...

இதுக்கு மேல நான் என்ன துப்பு துலக்குற ஏஜென்சி வச்ச விசாரிக்க முடியும்.நம்ம பெய புள்ளைக மேல நம்பிக்கைய போட்டு வந்து பார்த்தா துபாய்ன்னு சொல்லி கேரளாக்கு கொண்டு போன மாதிரி International சொலி Domestic-ல கொண்டு வந்து விட்டாங்க...

சரி இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எப்டியாவது போயிடலாம்னு சொல்லி பஸ்ல ஏறி உக்காந்தோம்...எனக்கு இருந்த லோ பிரஷர் எல்லாம் அன்னிக்கு சரியா போச்சு..அந்த பஸ்காரன் Domestic-ல இருக்குற எல்லா பயணிகளையும் நலம் விசாரிச்சு எங்களை கொண்டு வந்து விடும் பொது எங்களுக்கு அரை மணி நேரம் தான் இருந்துச்சு......

நேரா AirIndia manager கிட்ட போனேன்/....."Hello I have an emergency"-ன்னேன்

ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கன்னார் ....அடேய் என்னங்கடா விளையாடுறீங்களா ...என் விமானம் இன்னும் அரை மாநில போக போகுது..நான் emergencyனு சொல்றேன்...5 நிமிஷங்குரன்னு கத்த ஆரம்பிச்சேன்...

அந்த ஆளும் கடுப்பாயிட்டான்....இங்க பாருங்க...இந்த குறைந்த இடைவெளில என்னால ஒன்னும் பண்ண முடியாது.....என்ன பண்ணனுமோ பண்ணிக்கொங்க...

நான் ஒரு airline ஊழியர்ந்குரதுனால எனக்கு ஒரே ஆச்சர்யம்..எப்டி ஒரு வாடிக்கையாளர் கிட்ட இப்படி பேச முடியும்? நான் சொன்னேன்...இனிமே என் வாழ்க்கைல AirIndia-la ஏறவே மாட்டேன்னு...அதுக்கு அந்தா ஆள் சொல்றான். அது உங்க இஷ்டம் மேடம் அப்டின்னு.....இப்படி கூட இருப்பாங்களான்னு நான் வாய் அடச்சு போயிட்டேன்....நான் அங்க கழுதை மாதிரி கத்துறதை ஒரு ஊரே பார்த்துச்சு..

அப்புறம் அந்த மேலாளர் வந்து எங்கள தாஜா பண்ணி ஹோட்டல் ரூம் போட்டி குடுத்து மறு நான் வர சொன்னது வேற கதை.....

இப்போ நம்ம கத்தியோட கரு இனிமே தான்...

மறு நாள் 2 மணி நேரம் முன்னாடியே வந்துட்டோம்...எங்க கிட்ட அமெரிகாக்குள்ள நுழைய தேவையான எல்லா Documents இருந்துச்சு...

வரிசைல நின்னோம்....எங்க முறை வந்தததும் ஒரு கேன கிறுக்கன் கிட்ட போயி மாட்டினோம்....இந்த Immigration officers என்னமோ கடவுள்னு நினைப்பு ....முகத்தை இறுக்கமா வச்சுகிட்டு நாம எல்லாம் என்னமோ கிரிமினல்ஸ் மாதிரி தான் நம்ம பாஸ்போர்ட் பார்ப்பாங்க

அந்த ஆள் ஒன்னு ஒண்ணா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்டான்...எங்க படிச்ச...உங்க ஊர்ல இருந்து அந்த ஊர் எவ்ளோ தூரம் இந்த ஊர் எவ்ளோ தூரம் அப்டின்னு...நானும் மனசுக்குள்ள அடேய்..நான் என்ன highway contract-எ எடுத்துருக்கேன்.....அப்டின்னு வஞ்சுகிட்டு பதிலை சொன்னேன்...

சரி அதெல்லாம் இருக்கட்டும்..போலீஸ் verification லெட்டர் இருக்கா?அப்டின்னு கேட்டான் ...நாங்க விடுமுறைக்கு தானே வந்துருக்கோம்..அதுவும் ரெண்டு வாரம் தானே வந்துருக்கோம்...எதுக்கு போலீஸ் லெட்டர் வேணும்னு நான் கேட்டேன்

அந்த கேள்வி எலாம் என் கிட்ட கேக்காதீங்க ...இருக்கா இல்லையா?..இது அவன்


நான் சொன்னேன்...அது தேவைன்னு எனக்கு தெரியாது.. யாரும் கேட்டது இல்ல...

அவன் : அப்படின்னா உங்களை அனுப்ப முடியாதே...என்ன பண்ணலாம்

அதுக்குள்ளே எங்க வீட்டுக்காரர் ....சார் , நாங்க ஏற்கனவே ஒரு நாள் மிஸ் பண்ணிட்டோம்...எப்டியாவது போகணும் சார்.

நம்ம ரமணா பட dialog தான் ஞாபகம் வந்துச்சு....எப்டியாவது காப்பாத்திடுங்க சார்.

அவன் : உங்களை நான் அனுப்பணும்னா ரிஸ்க் எடுத்து தான் அனுப்பனும்....என்ன பண்ணலாம்...

எனக்கு அப்போ தான் பொறி தட்டுச்சு....ஓஹோ இவன் பிச்சை எடுக்குற சாதி போல இருக்கேன்னு

அவன் தொடர்ந்தான் :..சரி நேரடியா கேக்குறேன்...எவ்வளோ குடுக்க முடியும் உங்களால...

[இந்த உரையாடல் எல்லாமே தமிழ்ல நடந்துச்சு...நாங்க தமிழர்கள்ன்னு தெரிஞ்சுகிட்டு தான் இந்த மிரட்டல்..அவன் பெங்களூர் காரன் தமிழ் தெரிஞ்சது வசதியா போயிடுச்சு அவ்னுக்கு ]

அவன் : ஒரு அம்பது டாலர் குடுங்க ...நான் போட்டு குடுத்துடுறேன்...ஆனா அடுத்த தடவை வரும் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வாங்கன்னு......

கரிசனம் அய்யாவுக்கு எங்க மேல...

அதென்ன அம்பது டாலர்னா அவ்ளோ சாதரணமா.....அந்த அம்பதை வச்சு நான் ரெண்டு வாரத்துக்கு சாப்பிடுவேன்....

என் வீட்டுக்காரர் என்கிட்டே டாலர் இருக்கான்னு தெரியல....இருங்க பாக்குறேன்னு...ரெண்டு பெரும் கீழ உக்காந்து குசுகுசுன்னு பேசினோம்...எனக்கு ஆத்திரம் ஆதங்கம்..இயலாமை .....அப்டியே கத்தி ஊரை கூட்டிடலாமன்னு இருந்துச்சு

சரின்னு ஒரு 1500/- எடுத்து நீட்டினோம்....அவன் பதில் எதுவும் பேசல...வாங்கிட்டு சிரிச்சுட்டு நல்லபடியா போயிட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சான்

திட்டிகிட்டே வந்தேன்....பார்த்துகிட்டே இரு இந்த காசை நீ உருப்படியா செலவழிக்க முடியாது....உனக்கு வாந்தி பேதி தான் வர போகுதுன்னு...

இப்படி எல்லாம் சம்பாதிச்சு தான் இவங்க எல்லாம் ஊரெல்லாம் இடம் வாங்கி போடுறாங்களோ...எப்டி இவங்களால நிம்மதியா துங்க முடியும்...

இதெல்லாம் விட...அந்த ஆளை இழுத்து போட்டு கேள்வி கேக்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தம்....வெளிய தான் வாய் நீளுது...ஒன்னும் செயல்ல காமிக்க காணும்...

இங்கே வந்து இந்த கதைய சொன்னப்போ என்னோட பங்களாதேஷ் நண்பனுக்கும் இதே கூத்து நடந்துருக்கு கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு...அவன் immigration check எல்லாம் அவன் ஊர்லே முடிச்சுட்டு....connecting flight-க்காக மும்பை வந்துருக்கான்...அங்க அவனை மிரட்டி காசு வாங்கிருக்காங்க...எங்க இருந்து வருது இவங்களுக்கு தைரியம்....நாம பேச மாட்டோம்னு நம்பிக்கையா...ல்லை எங்க முஞ்சில எழுதி ஒட்டிருக்கா..கேளுங்கள் தரப்படும்னு


இருடி...அடுத்த தடவை இருக்கு உனக்கு....


இப்டி தான் நம்ம சுயநலத்துக்காக நாட்டை நாசப் படுத்துகிறோம்... ஒரு குறு குறுப்பு இருக்க தான் செய்யுது...

இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி மனுஷங்களை விட்டு வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் ....

வாயைப் பொத்திக் கொண்டு
பொன்னாத்தா

Sunday, June 14, 2009

வந்துட்டோம்ல....விட்ருவோமா

தெரியுமே...கொஞ்ச நாள் எல்லாரும் ரொம்ப நிம்மதியா இருந்துருப்பீங்களே..


பொன்னாத்தா போடுற மொக்கையும் இல்ல...அதுக்கு கமென்ட் போடுற தொல்லையும் இல்லைன்னு நிம்மதியா சந்தோஷமா ...
அது எப்டி...விட்ருவோமா...வந்துட்டோம்ல....


ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை.....இருந்தாலும் நாங்க வருவோம்ல...சூடு? சுரணை?....அப்டின்னா?


சரி சரி...உங்க பதிவு எல்லாம் படிக்காம போனதும் தப்புத்தேன் தப்புத்தேன்...
சரிக்கு சரியா போச்சு...பழம் போட்ருவோம்..சரியா...

இனிமே ஓவர் டைம் போட்டாலாவது எல்லார் பதிவையும் படிக்குறதா முடிவு பண்ணிட்டேன்...என்ன நல்ல முடிவு தானே...


வர்ட்டா ..


- பொன்னாத்தா -

Tuesday, April 21, 2009

காலத்தை வெல்ல போறேன்!!

ஆமா ஆமா...உங்க யாராலயாவது வியாழக் கிழமையில இருந்து வெள்ளி கிழமை பார்க்காம சனிக் கிழமைக்கு போக முடியுமா...
என்னால முடியுமே.....ஆமா ஆமா இந்த வியாழ கிழமை இரவு நியுயார்க்-ல விமானத்துல ஏறி உக்காந்தேன்னா [அது இந்தியால வெள்ளி கிழமை காலைல நேரம்.] நான் நேர வந்து பாம்பேல இறங்கும் பொது வெள்ளி கிழமை இரவு ஆகிடும்...அப்டின்ன வெள்ளி கிழமை காலைல எங்க போச்சு ?

நான் வெள்ளி கிழமை காலையை ஏமாத்திடுவேனே...
சரி சரி...வேற ஒன்னும் இல்லீங்க...ரெண்டு வாரம் நம்ம ஊருக்கு ஒரு சின்ன பயணம்,,,
உங்க பதிவு பக்கம் வர மாட்டேன்..என் பதிவு பக்கமும் வராதீங்க,,...

மதுரை பக்கமோ சேலம் பக்கமோ எங்கயாவது பொன்னாத்தா மாதிரி இருக்கேன்னு நீங்க நினச்சீங்கன்னா அது நான் இல்லப்பா ..

பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு
பொன்னாத்தா

Wednesday, April 15, 2009

முத்தையா முரளிதரன் !!

இது 2003-ல் நான் வரைந்த ஓவியம்


மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது
முத்தையா முரளிதரன்
ஆகும் எங்கள் கனவு


சாம்பலை தின்று செரித்தபடி
பொன்னாத்தா

Sunday, April 12, 2009

My Flash Work 2

என்னோட முதல் Flash work எல்லாரும் பார்த்துருப்பீங்க ...இப்போ உங்கள் பார்வைக்காக, என்னோட பொழுது போக்குக்காக இன்னொன்னு

எல்லாரும் சாமி கும்பிட்டு நல்லா கன்னத்துல போட்டுக்கோங்க...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நெத்தியில் திருநீற்று பட்டையுடன்

பொன்னாத்தா

Saturday, April 04, 2009

எங்கிருந்து வந்தாயடி

-*-
எங்கிருந்து வந்தாயடி..
என்னுயிரில் கலந்தாயடி...
-*-
இமைத் துடிப்பின் நடுவினிலே -
உன் உயிர்த்துடிப்பை உணர்கின்றேன்.
-*-
உயிர்த் துடிப்பாய் இருந்திட்டாய்-நீ
குருதியையும் பங்கிட்டாய்.
-*-
குருதியையும் பங்கிட்டேன்-என்
வாழ்வின் பொருள் உணர்ந்திட்டேன்.
-*-
வாழ்வின் பொருள் உணர்த்திட்டாய் - நீ
வாழ வைத்த தெய்வமன்றோ.
-*-
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
-*-
பொன்னகை தான்
மின்னிடுமோ உன்
புன்னைகை முன்னாலே.
-*-
தென்றலும் தான்
தவித்திடுமோ -உன்
தேகம் தனை தீண்டிடவே .
-*-
பகலவனும் துணிவானோ-உன்
பட்டு மேனி சுடுவதற்கு?
-*-
வெண்ணிலவும்
தேய்ந்ததுவே உன்
பால் கண்கள் கண்டதினால்.
-*-
உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி
-*-

நிலாவுக்காக ரொம்ப நாள் முயற்சி செஞ்சு கவிதை எதுவுமே உருப்ப்பா வரல...இது கொஞ்சம் பரவ்யில்லாமல் வந்துச்சுன்னு சில மாதங்களுக்கு முன்னாள் பதிவிட்டுருந்தேன்... இப்போ மறுபடியும் எல்லோர் பார்வைக்காகவும்.

கடவுளை உச்சி முகர்ந்தபடி ,,
பொன்னாத்தா

Tuesday, March 31, 2009

காலக் கடிகாரம்... கல்லூரிக்கு -விடாது தொடர்[ கருப்பு ]

நீங்க எல்லாரும் கல்லூரி முடிச்சு ஒரு 20 வருஷம் இருக்குமா....ஒ இல்லியா...நான் கூட நீங்க வயசானவர்னு நினச்சேன்....சரி சரி ..வயசுன்னு சொன்னது தேவா காதுல புகை வருது, ஆதவா, வேத்தியன் ரெண்டு பெரும் சின்ன பசங்க.....இளவட்டம்...ஊஞ்சல் ஆடுது....ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு


சரி மக்களே....நடு செண்டர்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா, அப்டியே நம்ம ஊட்ல இருக்குற சுவர் கடிகாரம், கைக் கடிகாரம், செல் பேசி, கணிப்பொறி,..அட என்னத்துக்கு எல்லாத்தையும் அடுக்கிக்கிட்டு, எந்த கன்றாவி எல்லாம் நேரம் காட்டுதோ அதே எல்லாம் அப்டியே reverse gear போட்டு பின்னாடி தள்ளி மீண்டும் கல்லூரி காலத்துக்கு போனா ..."ச்சே அப்படி பண்ணிருக்கலாம்....இப்டி பன்னிருக்கலாம்னு" நீங்க நினச்சு நொந்து போன விஷயங்கள் நிறைய இருக்கலாம்...மனசுல இப்போவும் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கலாம்...அப்படி எதுனா இருந்தா இங்க வந்து ஒப்பிங்க ..

யாருப்பா அது....நான் நல்ல படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்னு சொல்றது....இது தான வேனாம்குறது....நம்மால தான் முடியாதுன்னு நம்ம வாய் திறந்து சொல்லாட்டியும் நெத்தில எழுதி ஒட்டிருக்கே...இதெல்லாம் ஆகாது கேசுன்னு...அதெல்லாம் வேணாம் சரியா...அதுனால சும்மா டமாசு எல்லாம் பண்ணாம என்னை மாதிரி சீரியஸா யோசிச்சு தெளிவா சொல்லணும் ..

சரி என்னோட கல்லூரி வாழ்க்கைன்னா ரெண்டு விதம்
-பொறியியல் படிச்ச கல்லூரிக்கு பேரே பால்வாடி....கல்லூரி பேரை சொல்லி கப்பல் ஏத்த மனசு வரலப்பா..விட்ருங்க....
-மேலாண்மை கல்வி படிச்ச பல்கலை கட்டுப்பாடே கிடையாது...தெளிவா சொல்லனும்னா அவுத்த விட்ட கழுதைகள் மாதிரி ...

சரி ..இப்போ மட்டும் நான் கல்லூரியில் இருந்தா .........சொய்ங் சொய்ங் ..அதான்ப்பா தலை சுத்தி அப்டியே தானே பின்னாடி போவோம்...

- குருவி, காக்கா, வவ்வால் இப்படி பறவைகள் பேரா எல்லா பசங்களுக்கும் பட்ட பேரு வச்ச நாங்க எப்டியோ மயிலுன்னு யாருக்கும் வைக்காம விட்டுடோம்...அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்....அட அம்புட்டு கூட்டத்துல யாருக்குமேவா மயில் தோகை மாதிரி முடி இல்லாம போச்சு...



- அந்த பால்வாடில நான் எழுதின apology லெட்டர் - மன்னிப்புக் கடிதம்னு சொன்ன என்னமோ ரொம்ப மோசமா இருக்குல்ல ...எப்டியும் வாரத்துக்கு ரெண்டு எழுதுவேன்....செஞ்ச தப்பு ..செய்யாத தப்பு, பக்கத்தில இருக்குறவங்க செஞ்சது செய்யது எல்லாத்துக்கும் நான் எழுதிருக்கேன்...கடைசி வருஷம் எனக்கு தியாகி பட்டம் குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன் .....இப்போ மட்டும் கல்லூரிக்கு போனா, முதல்லையே சான்றிதழ் அடிக்குற மாதிரி ஒரு நூறு லெட்டர் அடிச்சு வச்சுக்கணும்..."template" கூட யோசிச்சு வச்சுருக்கேன்....தேதி, நடந்தது என்ன ..இது மட்டும் தான் நான் எழுதனும்......எம்புட்டு நேரம் மிச்சம் ஆகும் இல்ல?

-கல்வி சுற்றுலான்னு ஒன்னு போவோம் பாருங்க.....ஒவ்வொரு இண்டஸ்ட்ரிக்கும் பசங்க கஷ்டப்பட்டு ஆள் பிடிச்சு எல்லாம் ரெடி பண்ணி வைப்பாங்க.....என்னமோ வாழ்க்கைல சிங்காரிக்க எங்களுக்கு கிடைக்குற ஒரே வாய்ப்பு சுற்றுலா மட்டும்குற மாதிரி ஒரு 10 நாளைக்கு முன்னாடியே லிப்ச்டிச்க் , சுடிதார்னு எல்லாம் கடன் வாங்க ஆம்பிச்சுடுவோம்....ஆமா ஆமா...எங்க சுடிதார் முந்தின வருஷ சுற்றுலா போட்டோல இருக்குல்ல...அதையே போட்டு மறுபடி யாரவது போட்ட எடுப்பாங்களா ? இப்போ மறுபடி சுற்றுலா போக வாய்ப்பு கிடைச்சதுன்னா, கறாரா சொல்லிடுவேன் அவங்க சுடிதார் துவச்சு குடுக்கனும்னு .....ஆமா பின்ன...எத்தனை ஒசி சுடிதார் தான் துவைக்குரது .


-தினம் 8-10.30 study hour...என்னமோ பிறந்ததே சங்கீத குடும்பம் மாதிரி 8.45-க்கு சிலோன் ரேடியோல ஒரு 3 பாட்டு போடுவான்...அதைக் கேட்டு எத்தனை தடவை என் ரேடியோ வார்டன் ரூமுக்கு போயிருக்கு தெரியுமா.....தப்பு செய்யுறது தப்பு இல்ல...ஆனா அதை தப்பாம செய்யனுமே....அதுனால இந்த தடவை மூலைக்கு மூலை "SPY" வச்சுப்பேன்

-தமிழ் மீடியத்துல இருந்து போன நமக்கு மட்டும் இல்ல நமக்கு பாடம் சொல்லித் தர்ற வாத்தியார்கள் யாருக்குமே ஆங்கிலம் சரியா தெரியாதுன்னு தெளிவா புரிஞ்சுட்டு போயிருப்பேன்...

- கெமிஸ்ட்ரி லேப்ல " ஏம்மா 12th-ல கெமிஸ்ட்ரி-ல இவ்வளவு மார்க் வாங்கிருக்கியே ..இப்போ மட்டும் ஏம்மா தப்பு தப்பா டெஸ்ட் பண்றன்னு தினம் பாட்டு பாடுற லேப் assisstant கிட்ட .." சார்..அது அப்போ...இது இப்போ- நு தலைவர் ஸ்டைல்ல டயலாக் விட்ருப்பேன்.


- திமிர் பிடிச்ச மாதிரி இருந்தா தான் பசங்க மதிப்பாங்கன்னு என் தோழி சொன்னதை தெய்வ வாக மதிச்சுருப்பேன்....பொண்ணு சிரிச்ச போச்சுன்னு இப்போ புரியுது.....அந்த கதையா ?..அது ஒரு பெரிய மலை....அதுல ஒரு குருவி...

-9மணி வகுப்புக்கு அவசர அவசரமா கிளம்பி டான்னு 9.10-க்கு போயி நின்னா கொஞ்சம் கூட யோசிக்காம " யு மே கம் டூ த நெக்ஸ்ட் கிளாஸ் " நு பல்லுல நாக்கு (!) "படமா பேசுற வாத்தியார் கிட்ட "10 நிமிஷத்துல என்னத்த பெரிசா பாடம் எடுத்திட்டீங்க...எந்த கிளாஸ்ல இருக்கோம்....என்ன சொல்லி தரணும்னு தெரியாம குழம்பி போயி தலைய தானே சொரிஞ்சுட்டு இருந்தீங்க...நாங்க அடுத்த கிளாஸ்க்கு வந்தா மட்டும் உங்களுக்கு எங்க பாடம் புரிஞ்சுடவா போகுதுன்னு கேட்ருப்பேன்


- கடைசி வரைக்கும் முதல் ஆளா பரிச்சை பேப்பர் [ பரிச்சை ஆரம்பிச்சு 5 நிமிஷம்] குடுப்பேன்....பேப்பரை வாங்கி வச்சுட்டு வெளிய போக கூடாதுன்னு உக்கார வச்சுடுவாங்க.....இப்போ தான் புரியுது..முதல்ல எந்திரிச்சா பலி கடா அப்படின்னு.....இனிமே ரெண்டாவதா பொறுமையா 10 நிமிஷம் பொறுத்து தான் பேப்பர் குடுப்பேன்

- மெக்கானிக்கல் லேப்ல பேசிக்கிட்டே இருக்குறை உன் வாய்க்கு M Seal வாங்கி போடுறேன்னு சொல்ற வாத்தியாருக்கு சார்..பழைய காலத்துல இருந்து வெளிய வாங்க..இப்போ ஸ்ட்ராங்கான க்ளு கொரில்லா க்ளு தான்னு வாங்கியே குடுத்துருப்பேன்.....

சரி இப்போ நான் 5 பேரை கல்லூரிக்கு தள்ளி விடனும்ல..அட அதான் படிக்க வேண்டாம்னு சொல்லிடோம்ல..அப்புறம் என்ன பம்முறீங்க.....
தேவா



விதிமுறை
-ஒரே ஒரு விதி முறை தான்..நீங்க தற்போது கல்லூரியில் படிப்பவராக இருக்க கூடாது...ஆமா ...இது முதியோர் கல்லூரி தான்...அட ஏன்யா நீங்க வேற..சோகத்தை துடுப்பு போட்டு கிளறிக்கிட்டு

-கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு..... அடிச்சு கிளப்புங்க

கடிகார முள்ளை கல்லூரிக் காலத்தில் இறுகப் பிடித்தபடி ,,,,,
பொன்னாத்தா

Thursday, March 26, 2009

சவலை பாஞ்சுடுச்சு!!

ஜீவன் வீட்டுக்குள் நுழைவது கூட தெரியாமல் , பிறை கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்தாள்.


ஜீவன் அவளருகில் போய் மெதுவாய் அவள் தலையைக் கோதவும், திடுக்கிட்டு திரும்பிய அவள், அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் கனிப்பொறியை பார்த்து திரும்பினாள்.


ஜீவனுக்கு சற்றே வித்தியாசமான அனுபவம் இது. இவன் மாலையில் வீடு வந்து சேரும் முன் எப்படியும் பத்து முறையாவது இவனது செல் பெசி பிறையின் புகைப்படத்துடன் அதிர்ந்து விடும். வேலை அதிகம் இல்லாவிடில் இவனும் தவறாமல் அவளுடன் பேசி விடுவான்.


கடந்த சில நாட்களாக அதிகம் போன் செய்வது இல்லை.வீட்டுக்கும் வந்தாலும் பிறை அதிகம் பேசாமல் எதையோ யோசித்தபடியே இருந்தது ஜீவனுக்கு வேறுபட்டுத் தெரிய வில்லை.


ஜீவன் வந்ததும் விழுந்து விழுந்து கவனிக்கும் இவள் இன்று முகம் கூட குடுத்துப் பேசாதது ஜீவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் குடுத்தது.

அவள் கையைப் பிடித்து இழுத்து வரவெற்பறைக்கு கூட்டி வந்தான்.
பொதுவான குசலம் விசாரிப்பு நடந்தது.


ஜீவன் வரும் வாரம் அலுவலுக்காக வெளியூர் செல்ல‌ வேண்டிய‌ த‌க‌வ‌லையும் சொன்னான்.

அத‌ன் பின் ந‌ட‌ந்த‌ உரையாடல்....

ஜீவ‌ன்: அப்புற‌ம், உங்க‌ம்மா கிட்ட‌ பேசினியா ?


பிறை: இல்லீங்க‌..என‌க்கு நேர‌ம் கிடைக்க‌ல‌...[ நேர‌ம் கிடைக்க‌ல‌யா...அம்மா கூட‌ 2 ம‌ணி நேர‌ம் பேசுவதைத் தவிர‌ இவ‌ளுக்கு வேறு வேலை கிட‌யாதே..ம‌த்த‌ வேலை எல்லாம் வேலைக்காரி தானே செய்வா]




ஜீவ‌ன் : ஏன்? ச‌ரோஜா வ‌ர‌லியா?


பிறை: வ‌ந்தாளே...சாய‌ந்த‌ர‌ம் இருந்து பாத்திர‌ம் க‌ழுவிட்டு போறென்னு சொன்னா....நான் தான் ம‌திய‌மே போக‌ சொல்லிட்டேன்.[த‌னியா வீட்ல‌ இருந்தா பைத்திய‌ம் பிடிக்குற‌ மாதிரி இருக்குன்னு சொன்ன‌துனால‌ தான் அதிக‌மா ச‌ம்ப‌ள‌ம் குடுத்து ச‌ரோஜாவை சாய‌ந்திர‌ம் வ‌ரை இருக்க‌ வைத்தான்]


இவ‌ன் யோசிச்சுட்டு இருக்கும் போதே பிறை தொட‌ர்ந்தாள்

பிறை: ஏங்க‌ என்னை இப்போ 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌ங்க‌...

ஜீவ‌ன்: என்ன‌து....4 பேரு ஃப‌லோவ் ப‌ன்றாங்க‌ளா?.என்ன‌ த‌ங்க‌ம் சொல்ற‌? எங்க‌ போன‌? த‌னியா போனியா?யாரு அவ‌ங்க‌?சுத்தி யாரும் இல்லியா? என்ன‌ ஆச்சு..என‌க்கு ஏன் போன் ப‌ன்ன‌லை ?

பிறை:நான் எங்க‌ போற‌து? நீங்க‌ இல்லாம நான் எங்க‌ போயிருக்கேன்...எங்க‌யும் போக‌லீங்க‌


ஜீவ‌ன்:அப்புற‌ம் உன்னை யாரு எங்க‌ ஃபாலோவ் ப‌ன்னாங்க‌?


பிறை: அட‌ இருங்க‌....சொல்லி முடிச்சுக்க‌றேன்....இது வ‌ரைக்கும் யாருமே க‌ன்டுக்க‌வே இல்லியா....என‌க்கு ரொம்ப‌ க‌ஷ்டமா இருந்துச்சு.....இப்போ தான் ஃஃபாலோவ் ப‌ன்றாங்க‌.....என‌க்கு என்ன‌மோ பெரிசா சாதிச்ச‌ மாதிரி இருக்குங்க‌


ஜீவ‌ன் முடிவே செஞ்சுட்டான்....த‌னியா இருக்குற‌ பிறைக்கு என்ன‌மோ ஆயிடுச்சுன்னு..


தொட‌ர்ந்தாள் பிறை...


பிறை : அந்த‌ 4 பேரும் தின‌ம் வ‌ந்துடுறாங்க‌ங்க‌....நான் ஏதொ சொல்ல‌ அவ‌ங்க‌ ஏதொ சொல்ல‌ என்னைச் சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க‌...

ஜீவ‌னுக்கு நிஜ‌மாக‌வே த‌லை சுத்திய‌து....

இவ‌ள் சொல்வ‌தையெல்லாம் ஜீவ‌ன் ஆர்வ‌மாய் கேப்ப‌தாய் எண்ணிக் கொண்டு பிறை தொட‌ர்ந்தாள்

பிறை: முக‌ம் தெரியாத‌ ஆளுங்க‌ ந‌ம்ம‌ளை பாராட்டும் போது ச‌ந்தோஷ‌மா இருக்குங்க‌...அவ‌ங்க‌ சொல்ற‌ க‌மென்ட் எல்லாம் நிறைய‌ ஊக்க‌ம் குடுக்குது...


ஜீவ‌ன்: என்ன‌து க‌மென்ட்டா ?

பிறை: ஆமாங்க‌...சில‌ர் ந‌ல்லாருக்குன்னு சொல்லுவாங்க‌...சில‌ர்..அது கொஞ்ச‌ம் மாத்தினா ந‌ல்லா இருக்கும்னு சுட்டிக் காட்டுவாங்க‌....அதுனால‌ நானும் இப்போ ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் என்ன‌ ப‌ன்றாங்க‌...நான் எப்டி இன்னும் ந‌ல்லா ப‌ண்ண‌லாம்னு இன்டெர்னெட்ல‌ நிறைய‌ ப‌டிக்குறேங்க‌...


முடிய‌ல‌ம்மா?....நினைத்துக் கொண்ட‌ ஜீவ‌ன்..


ஜீவ‌ன்: பிறை... நீ சொல்ற‌து எதுவுமே என‌க்கு விள‌ங்க‌லை...கொஞ்ச‌ம் தெளிவா சொல்லு கண்ணு....


பிறை....ஏங்க‌...இது கூட‌வா புரிய‌ல‌...நான் கொஞ்ச‌ நாளா ப‌திவு எழுதுறென்ல‌.... "என் ஜீவ‌ன்" அப்ப‌டீன்னு....அது தாங்க‌.. நான் எழுதுற‌து ந‌ல்லா இருக்குன்னு 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌....க‌மென்ட் மாத்தி க‌மென்ட் போடுறாங்க‌ ப‌திவுக்கு....நிறைய‌ க‌மென்ட் போடுற‌துக்கு பேரு தான் கும்மி அடிக்குற‌து....


ஜீவ‌ன்: அடியே..என் செல்ல‌க் கிறுக்க‌ச்சி ,,,இதை தெளிவா சொல்ல மாட்டியா, வ‌ர‌ வ‌ர‌ என் கூட‌ பேசாம‌ எப்போ பார்த்தாலும் க‌ம்ப்யுட்ட‌ரைக் க‌ட்டிக்குட்டு அழுதுட்டு இருக்கியே...பைத்திய‌ம் பிடிச்சு போச்சு,,,,கீழ்ப்பாக்க‌த்துல‌ வீடு பார்க்க‌னுமோன்னு நினைச்சேன்...


பிறை:..ம்க்க்ம்...நான் புதுசா எதுவும் பண்ணிட்டா பொறுக்காதே ..



சில‌ வார‌ங்க‌ள் க‌ழித்து....


பிறை அவ‌ளுடைய‌ ப‌திவுக்கு வ‌ந்த‌ க‌மென்ட் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். த‌ன்னையே சுற்றி வ‌ந்த‌ ஆசை ம‌னைவிக்கு வெறொரு விஷ‌ய‌த்திலும் ஆர்வ‌ம் வ‌ந்த‌தைப் பொறுக்க‌ முடிய‌ வில்லை ஜீவ‌னால்..


ஜீவ‌ன்: பிறை,....உன‌க்கு ஒரு செய்தி தெரியுமா?....ல‌ன்ட‌ன்ல‌ ஒருத்த‌ன் அவ‌னோட‌ மனைவி பொழுத‌ன்னிக்கும் "Face Book" பார்த்தாங்குற‌துக்காக‌ அவ‌ளை விவாக‌ர‌த்து ப‌ன்னிட்டானாம்....


பிறை:...அதுக்கு என்ன‌வாம் இப்போ? விவாக‌ர‌த்து ப‌ன்ன‌னும்னு நின‌ச்சுட்டா அதுக்கு கார‌ண‌ம் தேவையா?.....


ஜீவ‌ன்: ஆமா....இப்போ உன்னை எடுத்துக்கோ...முன்ன‌ எல்லாம் நான் வ‌ர‌ முன்னாடி வாச‌ல்ல‌ வ‌ந்து காத்து இருப்ப‌....இப்போ நான் வ‌ந்த‌ பிற‌கும் கூட‌ கண்டுக்காம‌ க‌ம்ப்யுட்ட‌ர்ல‌ தான் க‌ண்ணா இருக்க‌..


பிறைக்கு புரிந்த‌து....க‌ண‌வ‌னுக்கு ச‌வ‌லை பாஞ்சுடுச்சுன்னு.....


[ ச‌வ‌லை: இர‌ன்டாவ‌து குழ‌ந்தைக்கு அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்தினால் முத‌ல் குழ‌ந்தை ஏங்கி மெலிந்து விடும்...]

பொன்னாத்தா க‌தை எழுதிட்டா....பொன்னாத்தா க‌தை எழுதிட்டா
ச‌வ‌லை பாய்ந்த‌ பிள்ளையை தாலாட்டிய‌ப‌டி

பொன்னாத்தா

விட்டு விடு; விலகி விடு;

விடுதலைக்காகவே
காத்திருந்த
கண்ணீரும்...
-*-
விடை பெறவே
காத்திருந்த
இதயத் துடிப்பும்...
-*-
விட்டு விடவே
காத்திருந்த
நீயும்....
-*-

இன்று என்னுள்
செத்துப் போய்.




சடமாய் ...
பொன்னாத்தா

மக்களே...காதல் தோல்வி எல்லாம் இல்லீங்கோவ்...சும்மாச்சுக்கும் மனசுக்குள்ள பீலிங் ஏத்திப் பார்த்தேன்....

இதையே மாற்றி ஆதவா எழுதியது..
கண்களில்

சிறைபட்டிருந்த

கண்ணீரும்....


உனக்காகவே

காத்திருந்த

இதயத்துடிப்பும்...


விட்டுவிடாமல்

நின்றிருந்த

நீயும்...


இன்று என்னுள்

தொலைந்துபோய்....

திருத்தி எழுதிய‌ப‌டி

ஆத‌வா [ ஹி ஹி ]

Monday, March 23, 2009

திருப்புற சுந்தரி!!

கல்லூரில கூத்தடிக்குறதுக்கு நமக்கு எல்லாம் காரணமா வேணும்...ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம்..இஹ்ஹி இஹ்ஹி தான்....அதுவும் விடுதின்னா கேட்கவே வேண்டாம்..." Study hour"-ல தான் நமக்கு புதுசு புதுசா ஜோக் தோணும்....


தோழி ஒருத்திக்கு [ நம்ம திருப்புற சுந்தரி ] புடிச்ச விஷயம் என்னன்னா எல்லாரோட பேரையும் திருப்பி போட்டு கூப்பிடுறது...அந்த வேலைய அவ கொஞ்சம் கூட பிழை இல்லாம செய்யுவா.....திருப்பின்னா எப்டின்னா...உதாரணத்துக்கு 'தேவி' அப்டிங்குற பேரை 'விதே'; 'கவிதா - தாவிக' ..தாவிக்க தாவிக்கனு கூப்பிட்டா கடுப்பு வராதா? ஷெர்லீயை லீர்ஷெஃ ....சங்கீதாவை தாகீங்ச ...பிருந்தாவைத் திருப்பிப் போட்டா "தாந்த்ருபி"...சில பேரைத் திருப்பி போட்டா நல்லா தான் இருக்கும்...சில பேரைத் திருப்பி போட்டா அந்த பேருக்கு சொந்தக் காரிக்கு காது மூக்கு எல்லாம் புகை வரும்...
இவளோட அட்டகாசம் தாங்க முடியாம எல்லாரும் சேந்து ஒரு முடிவுக்கு வந்தோம்...அவ வழியில அவளை அடக்குறது தான் சரி, எளிதும் கூடன்னு ..





நாங்க அந்த முயற்ச்சியை செயல் படுத்தின அதே நாள்ல அவ எங்களை எல்லாம் திருப்பி போட்டு கூப்பிடுறதை விட்டுட்டா....எப்டின்னு கேக்குறீங்களா... ரொம்ப எளிது....அவ பேரு சீதா....திருப்பி போட்டா என்ன வரும்... அவ்ளோ தான் அம்மணி கப் சிப்..




சீதாவின் நினைவுகளை திருப்பியபடி

பொன்னாத்தா

Friday, March 20, 2009

கணவர்கள் விற்பனைக்கு..



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..


  • முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

  • இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

  • மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு.

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

  • ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு.

இது கதையில சொல்லப்பட்ட நீதி...ஆனா இந்த கதை எழுதினவங்களுக்கு நான் சொல்ல நினைக்குறது என்னன்னா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இப்டி தான் ஆண்கள் பிதற்றுவார்கள்..அதுக்கப்புறம் எல்லா தகுதியும் காணாம போயிடும்..இதுக்கெல்லாம் மசியுற பெண்மணிகள் நாங்கள் இல்லை.....

அதுனால கனவான்களே வேற ஏதாவது புதுசா முயற்சி செய்யுங்க .

மறந்த மறக்கப்பட்ட பழைய வாக்குகளை அசை போட்ட படி

பொன்னாத்தா

Tuesday, March 17, 2009

மீண்டும் பிரசவம் !!

ஐ தலைப்பை படிச்சுட்டு என்ன எல்லாமோ நினச்சு வந்தீங்கன்னா இங்க இன்னும் நிலா மட்டும் தானுங்கோவ்
ஓவியம்

புகைப்பட மாதிரி


படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பாருங்க

உன்னை ஈன்றெடுத்த பொழுதினில்
பெற்ற சந்தோசம்
மீண்டும் அடைந்தேனடி
என் சின்ன கண்மணி
-----------------------------------------------------------------------------------------------

கேள்விக்கென்ன பதில் பதிவு போடும் பொது தனித் திறமை என்னங்குற கேள்விக்கு "நன்றாக [!] ஓவியம் " வரையத் தெரியும்னு சொல்லிருந்தேன்...சில நண்பர்கள் முயற்சி பண்ணலாமே, பதிவா போடலாமேன்னு நம்ம மண்டைக்கு மேல 60 வாட்ஸ் பல்பு எரிய வச்சாங்க....அப்போ தான் நிலாவோட ஓவியம் பண்ணிட்டு இருந்ததுனால, கொஞ்சம் தைரியமா சரின்னு சொல்லி வச்சேன்......சொல்லிட்டேனே ஒழிய கொஞ்சம் இதயத் துடிப்பு திக்கி திக்கி தான் இருந்துச்சு...ஆஹா.. நெருங்கின நண்பர் வட்டாரம்னா அப்டி இப்டின்னு எதுனா சாக்கு சொல்லி சமாளிச்சுடலாம் ஒருவேளை ஓவியம் சரியா வரலன்னா....நம்ம பதிவு உலகத்துக்கு இன்னான்னு சொல்றதுன்னு ......
என் தாயி மகராசி நிலா எப்போவும் போல இப்போவும் சமத்துக் குட்டியா ஒத்துழைப்பு குடுத்துட்டா...
எனக்கு நானே கற்பனை செஞ்சு கொஞ்சம் கொஞ்சம் கிறுக்க தான் தெரியுமே தவிர முழுசா கற்பனைல ஒரு ஓவியத்தை உருவாக்க தெரியாது...
இதவரைக்கும் மற்ற ஓவியங்களை பார்த்து தான் நகல் எடுத்துருக்கேனே தவிர ஒரு நிஜ உருவத்தை வரஞ்சது கிடையாது...
இதுல செண்டிமெண்டா வேற ஒரு பயம்..ஆஹா நம்ம புள்ளை படம் முயற்சி பண்றோமே, நல்ல வரலன்னா என்ன பண்றதுன்னு....
முகம் மட்டும் வரைய ஒரு இரண்டு மணி நேரம் தான் ஆச்சு...அதுக்கப்புறம் ஒரு ஒரு வாரத்துக்கு போகும் போதும் வரும் போதும் பார்த்து வயிறு ஒரே கலக்கல்.....ஏன்னு கேளுங்க.....சுருட்டை முடிய எப்படி வரையுரதுன்னு தான்...இது வரைக்கும் பெண்கள் ஓவியம் நிறைய வரஞ்சுருக்கேன்...ஆனா முடிக்கு முக்கியத்துவம் வர்ற மாதிரி எதுவும் வாய்ச்சது இல்லை....கொஞ்சமா தான் முடி தெரியும்...இல்லன்ன ஜடை பின்னாடி போயிரும்......இந்த படத்துல முடி தானே முக்காவாசி ...என் அசட்டு தைரியத்து மேல எனக்கு கோவம் கோவமா வந்துச்சு...என்ன பண்றது புலி வாலைப் புடிச்ச விட்டுற முடியுமா ..இறுக்கமா புடிச்சுக்கிட்டேன்
எப்டியோ முடிச்சாச்சு......
இனி எல்லாம் உங்கள் கைகளில்


தூரிகையை கழுவியபடி,

பொன்னாத்தா

Wednesday, March 11, 2009

மொக்கை கவிஜ- தொடர் பதிவு

தொடர் பதிவுஅழைத்தது தேவா...

நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...

நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
நல்லா இருங்க சாமி....நீங்களும் உங்க புள்ளைக் குட்டிகளும் நல்லா இருப்பீகய்யா.....நல்லா இருப்பீக...


என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....

---------------------------------------------------------------
கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு
------------------------------------------------------------

குறிப்பு: இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....

சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....

நான் அழைப்பு மணி அமுக்கும் பதிவு வாசல்கள் :
தேவி : வானவில் [ தேவி என் கல்லூரித் தோழி]
நசரேயன் : என் கனவில் தென்பட்டது

மொக்கையை முழுங்கியபடி
பொன்னாத்தா

Monday, March 09, 2009

என் கேள்விக்கென்ன பதில் ?

1.உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
-என் பெயர் பொன்னரசி. என்னோட தாத்தா பேரு பொன்னுசாமி . அவர் பேரை வைக்கனும்னு வச்சாங்க.
-கண்டிப்பா...எத்தனை பேர் பாராட்டி இருக்காங்க தெரியுமா

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நிலாவை எங்க அம்மா கூட அனுப்பி வச்சப்போ.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இப்போ இப்போ கொஞ்சம் கொஞ்சம் தேறிகிட்டு இருக்கு...அதுனால பிடிக்கும்...பள்ளிக் கூடம் படிக்கும் போதெல்லாம் கோழிக் கிறுக்கல் தான்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
வேற என்ன...கல்யாண சாப்பாடு தான்....சாம்பார், ரசம், ஒரு நாலஞ்சு பொரியல்..ஹி ஹி

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கொஞ்சம் கஷ்டம் தான். முதல்ல நண்பி ஆயிடுவேன்....ஆனா தொடர்ந்து நட்பு பாரட்டுவேனான்னு சந்தேகம் தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா
கடல்ல குளிக்குறது நல்ல விளையாட்டு....அருவியில் குளிக்குறது சுகம்...ஆத்துல குளிக்குறது ரொம்ப பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடை, கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது-தைரியம் , எல்லாத்தையும் தெரிஞ்சக்கனும்ன்குற ஆர்வம்...சோர்ந்து போகாமை
பிடிக்காதது-முன் கோபம், பொறுமையின்மை
9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்சது - பொறுமை
பிடிக்காதது- எப்போ பார்த்தாலும் TV பார்ப்பது...[ யப்பா... எப்டி தான் முடியுதோடா சாமி ]

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
தற்க்காலிகமாக நிலா, எப்பொழுதும் குடும்பம்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை

12.என்ன கேட்டு கொண்டு இருக்குறீங்க ?
குக்கர் சத்தம் , TV சத்தம்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?
அடர்ந்த ரோஜா வர்ணம்

14.பிடித்த மனம்
-மழை பெய்றதுக்கு முன்னாடி வரும் மண்வாசம்
-துவைத்த போர்வையில் முதல் நாள் படுக்கும் போது வீசும் சோப் மனம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்க காரணம் என்ன ?
அவரின் கவிதைகளும் வார்த்தை உபயோகங்களும். ......அவரின் வரிகள் ஒவ்வொன்றும் அவர் எவ்வளவு எளிமையனவர்னு காட்டுது...சிலோன் தமிழர்கள்னாலே எனக்கு பிடிக்கும்....இவரை பற்றியும் தெரிந்து கொள்ள அவா..[ யார் அவர்....கீழே பாருங்க ]

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
எனக்கு என்னோட நண்பர் ஒருத்தர் "face book"-ல அனுப்பினார்...அவரை ரொம்ப எல்லாம் தெரியாது

17. பிடித்த விளையாட்டு..
நேற்று வரை வாலி பால் ; நேற்றில் இருந்து பெயின்ட் பால் [ அந்த கதை தனி பதிவில்]

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்.
கதை இல்லாவிடினும், கருத்து இல்லாவிடினும் ..விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படங்கள் ...

20.கடைசியாப பார்த்த படம்
வெண்ணிலா கபடிக் குழு

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம் - ஊரே பூக்காடாய் இருக்கும்
இலையுதிர் காலம் -வண்ண வண்ணமாய் பூக்களின் அழகையும் மிஞ்சும் இலைகள்.
22/என்ன புத்தகம் படித்து கொண்டு இருக்கீங்க ?
Beneath the Marble Sun.

23.உங்கள் desktop-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு
ஒரு நாள் மாற்றுவீர்கள் நிலாவோட படங்கள் தன் இருக்கு...வாரத்துக்கு குறைந்த பட்சம் ஒரு முறை மாற்றுவேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
வீணை சத்தம் பிடிக்கும்....குழந்தை அழும் சத்தம் என்னால கேக்கவே முடியாது....வேறு யார் குழந்தையானாலும் தேற்ற முயற்சி செய்வேன்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?
இப்போ இருக்குறதே தூரம் தானே....நியு யார்க்-ல ....இதையும் விட தூரம்னா கலிபோர்னியா போனது தான்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ஹ்ம்ம்..ஆட தெரியாது, பாட தெரியாது....அனால் நன்றாக (!) ஓவியம் வரையத் தெரியும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
ஏமாற்றம். ...ஆனா தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்துல ஏமாந்துட்டு தான் இருக்குறேன்....கொஞ்ச நேரத்துல சரி ஆயிடுவேன்...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், எரிச்சல்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஜெய்ப்பூர் , ஆக்ரா கோட்டை .....மறுபடி போகனும்னு ஆசை
30.எப்படி இருக்கணும்னு ஆசை
எதுக்குமே அலட்டிக்காம நடக்குறது நடக்கட்டும்னு இருக்கணும்னு ஆசை....ஹ்ம்ம்....முடியலியே

31.கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்
ஷாப்பிங் [ ரொம்ப கஷ்டம் ]

விதி முறை
  • ஒரே ஒருவரை மட்டுமே அழைக்கலாம்.
  • இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க, உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரை போட வேண்டும்.

நான் அழைப்பது : ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பதில் தேடிய படி

பொன்னாத்தா [எ] பொன்னரசி

Sunday, March 01, 2009

நிலவில் ஒரு நாள்!!

நேரம் : நள்ளிரவு
ஆழ்ந்த நித்திரை
தீவிரமான நிசப்தம்

டொக் டக் டொக் டக்
நித்திரைக் குதிரை என் வீட்டு வாசலில்

என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..
எனை விட்டு மெதுவாக
என் மேனி நோகாமல் பிரிந்து எழுந்தது.
என் கண்கள் திறக்காமல் திறந்தன.

ஆத்மா (எ) ஆவிக்கு "நான்" என்றும்
நித்திரை குதிரைக்கு "கனவு" என்றும் பெயர் சூட்டப் பட்டது.


நான் நடந்து கனவிடம் சென்றேன்.
கனவு கேட்டது .."எங்கு உன்னை இட்டுச் செல்லட்டும்"
நான் சொன்னேன் " நிலவிற்கு"

கனவு குனிந்து அதன் மேலேறச் சொல்லி சமிக்ஞை செய்தது.
என்னை மேலேற்றியது காற்றா கனவா தெரிய வில்லை
இப்பொழுது கனவின் முதுகில் நான்

பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்

மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள்
கண் சிமிட்டியபடி

நிலவு சேர்ந்து விட்டோம்
தெருவெங்கும் பாலாறாய் நிலவு வெளிறிப் போய்.

எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு பசியாற்றலாம் - நினைத்தேன் நான்

வெள்ளை ரோஜா தவிர வேறெதற்கும் அனுமதி இல்லை போலும்
எங்கெங்கும் வெள்ளிப் பூக்களாய் வெள்ளை ரோஜாக்கள்

நான் இறங்கி நடந்தேன்..
இல்லை இல்லை கனவுடன் பாலாற்றில் மிதந்தேன்.

அவ்வளவும் அழகாய் கண் விரிய வைக்கும்
ஆச்சர்யமாய்.

எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் தெரிய வில்லை.
மயக்கம் தெளிந்தவளாய்
ஒரு கணம் நின்றேன். ஏதோ யோசனை
கீழே குனிந்து பார்த்தேன்
பூமிப் பந்து பிரகாசமாய்.

மனதுக்குள் சுருக்கென்று சோகம்.

சட்டென்று நிலவு வெறுத்து விட்டது

திரும்பி நடை போட்டேன்...இம்முறை மிதக்க வில்லை... நடந்தேன்..

கனவு கேட்டது..."என்ன ஆயிற்று"
நான் சொன்னேன் .." நிலவு வெறுத்து விட்டது"
கனவு புருவம் தூக்கிய படி "என்ன? "
நான் : "ஆம் நிலவு ஒரு வெற்று
நிலவு ஒரு போலி
நிலவு ஆடம்பரம்"
நிலவில் அன்பில்லை"

கனவு ." ஏன்...என்ன இல்லை நிலவில்?"
நான் : "மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
பாலாறாய் சாலைகளும்
வெள்ளியாய் பூக்களும்
வேண்டாமே எனக்கு "

கனவு " என்ன ..இந்த ஆடம்பரம் வேண்டாமா? வேறென்ன வேண்டும் உனக்கு"

நான் " எனை உற்றவன் இங்கில்லை
என் உடன் பிறந்தவள் உடனில்லை
எனக்கு உயிர் குடுத்தவரும் காண வில்லை
என்னிடம் உயிர் பகிர்ந்தவளும் அருகிலில்லை
நிலவில் அன்பும் இல்லை; அரவணைப்பும் இல்லை "


கனவு தலை குனிந்து அமைதி காத்தது

நான் நடையைத் தொடர்ந்தேன்
கனவு விரைந்து முன் வந்து குனிந்து ஏறச் சொன்னது

பறந்து விரைந்தோம்.

டொக் டக் டொக் டக்
கனவுக் குதிரை செல்லும் சத்தம்
என் உடம்பை எதுவோ ஆட்டியது
கண்களை இம்முறை மெய்யாகவே திறந்தேன்
எனக்கு உயிர் தந்த தாய் பாலுடன் பௌர்ணமியாய்.

வாசல் வந்தேன் என் உடன் பிறந்தவள்
நட்சத்திரங்களை கோலமாக்கியபடி.

பின்னாலிருந்து என்னைக் கட்டிப் பிடித்தபடி
என் உயிர் பகிர்ந்த வெள்ளை ரோஜா

அண்ணார்ந்து பார்த்தேன்.
நிலவு போய் சூரியன் சிரித்தான்

நானும் சிரித்தபடி எத்தனித்தேன்
நிஜமான நினைவுகளுடன் பிரயாணிக்கத் தயாராய்


நினைவுகளுடன்
பொன்னாத்தா !!

Friday, February 27, 2009

குப்பைத் தொட்டி மனிதர்கள்

இது எனக்கு இ மெயிலில் ஆயிரக்கணக்கான ஃபார்வேர்டு பொத்தான்கள் அமுக்கப்பட்ட பிறகு வந்து சேந்துச்சு....படிச்சதும் என்னமோ ரொம்ப உண்மைன்னு தோணுச்சா..அதுனால சரி நம்ம மக்கள் கிட்ட பரிமாரிக்கலாமேன்னு...
[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]
-----------------
ஒரு நாள் நண்பி ஒருத்தி வாடகை மகிழுந்துல ஏறி விமான தளத்துக்கு போறதுக்காக போயிட்டு இருந்தா....மகிழுந்து ஓட்டுனர் மிகவும் ஜாக்கிரதையா நிதானமா வண்டி ஓட்டிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பொந்துக்குள்ள இருந்து வந்த மாதிரி சந்துக்குள்ள இருந்து வந்துச்சு இன்னொரு மகிழுந்து ..
அப்டியே பிரேக் மேல ஏறி நின்னு இழுத்துப் பிடிச்சு ரெண்டு வண்டிக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாம நண்பியோட வண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்திட்டார்.
இவர் வண்டிக்கு எந்த ஒரு சேதமும் குடுக்காம கிளம்ப எத்தனிக்கும் போது அந்த இன்னொரு ஓட்டுனர் வசை பாட ஆரம்பிச்சுட்டார். என் தோழிக்கு பயங்கர கடுப்பு....சரி ஊர் பேர் தெரியாத ஊர்ல நமக்கு ஏன் வம்புன்னு இவ வாயில ஸிப் இழுத்து போட்டா...

இருந்தாலும் இவளோட ஓட்டுனர் எதுவுமே நடக்காம ரொம்ப சாதரணமா இருந்தது பார்த்து இவளுக்கு ஆச்சர்யம்.அவர் கிட்டயே கேட்டா " என்னங்க..அந்த ஆள் தப்பும் பண்ணிட்டு என்னமோ நீங்க தான் தப்பு பண்ண மாதிரியும் அவன் ஏதோ லார்டு லபக்கு தாஸ் மாதிரியும் பேசுறானே..உங்களுக்கு கோபம் வரலியான்னு"...அதுக்கு ஓட்டுனர் சொல்லிருக்கார்...." கோபம் எல்லாம் வரலீங்க...எனக்கு அந்த ஆளை பார்த்தா பாவமா தான் இருக்கு...இவரை மாதிரி நம்மளை சுத்தி நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க ...இவங்க எல்ல்லாம் குப்பை வண்டி மாத்ரிங்க ..தினமும் கோப தாபங்க, ஏக்கம், இயலாமை, எரிச்சல் எல்லாத்தையும் சேர்த்து சேர்த்து வச்சுட்டு இருப்பாங்க....குப்பை வண்டி நிறைஞ்சதும் இறக்கி வைக்க இடம் தேடுவாங்க......நம்மளை மாதிரி ஆளுங்க மேல கொட்டி விட்டு போயிடுவாங்க நாம அவர் பேசினதுக்கு பதில் பேசினா நம்ம அவர் குப்பைய அள்ளுற மாதிரி ஆயிடும்...தூசி தட்டி விட்டா மாதிரி இதையும் தட்டி விட்ட போனா தான் நமக்கு நல்லது...இல்லன்னா இந்த குப்பையை அள்ளிட்டு போயி நாம வீட்ல நம்ம பிள்ளை குட்டிங்க இல்லாட்டி அலுவலகத்துல நம்ம கூட வேலை பாக்குறவங்க மேல கொட்டிடுவோம்.."

அப்போ தான் என் மர மண்டை நண்பிக்கு தோணிருக்கு..ஆஹா...எம்புட்டு பெரிய விஷயத்தை இவ்ளோ சாதரணமா சொல்ராறேன்னு....

---------------------- -----------------------------------------------------------------------

சரி....என்ன தான் சொல்ல வர்றன்னு நீங்கள்லாம் இடத்தை விட்டு எந்திருக்குறது தெரியுது....முடிச்சுடுறேன்..முடிச்சுடுறேன்..
# எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க
#இருக்க போறது கொஞ்ச நாள்...அதுல ஏன் காலங்காத்தால எந்திரிக்கும் போதே குப்பை மூஞ்சியோட எந்திரிக்கனும்?
#உங்களை நல்ல படிய மதிக்குரவங்களை நீங்களும் மதிச்சு நடந்துக்கோங்க...
#உங்களை கேவலமா நடத்துரவங்களை மன்னிச்சு மறந்துடுங்க....[ போன வருஷ performance-க்கு review சரியா குடுக்காத மேலாளரையும் மன்னிப்போம்.மறப்போம்...]
#Life is ten percent what you make it and ninety percent how you take it!



சரி....எனக்கு ஒரு சந்தேகம்.....இப்போ என் கிட்ட இருக்குற குப்பையை கொட்டலாமா கூடாதா ? ...அவ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பையுடன்
பொன்னாத்தா

Wednesday, February 25, 2009

தொடர் பதிவு- வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

இதுக்கு பேரு தான் பழிக்கு பழி வாங்குறது...


நான் ஒரு தொடர் பதிவுல இழுத்தேங்குறதுக்காக மருத்துவர் மறுபடி என்னை ஒரு தொடருக்கு இழுத்துட்டார்.....இருந்தாலும் சந்தோசம் தான் ..ஏன்னா இது தங்க தமிழ் பற்றிய பதிவாச்சே

வழக்கொழிந்த சொற்கள் என்ன எல்லாம்..?

அப்டியே இந்த தொடரை தொடர்ந்து போயி பார்த்ததுல அப்டி இப்டின்னு நம்ம பதிவர் உலகம் மறந்து தொலைந்து...தொலைய போகுற எல்லா வார்த்தைகளையும் இழுத்து புடிச்சுடுச்சுன்னு தான் தோனுது.

தொலஞ்சு போன விஷயத்தை தேடுறதுக்கு பதிலா ஏன் தொலஞ்சு போன காரணத்தை தேட கூடாது?

ஆகா நான் இத்தனை வார்த்தைகளை தொலைச்சுட்டேன்னு சொல்றதுக்கு பதிலாக .....இனிமே இந்த வார்த்தைகளை தொலைக்க மாட்டேன்னு தான் நான் முடிவு எடுத்துருக்கேன்

ஏன் தொலையுது..எப்டி தொலையுது...நம்மளோட வினைகளுக்கும் நம்ம சுற்றி இருக்குற வினைகளுக்கும் நாம தாங்க காரணம்.

புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்தா கேள்வி கேப்பாங்களேன்னு முதல்ல இருந்து வார நாட்களை திங்கள், செவ்வாய்னு சொல்லாம மன்டே, ட்யுஸ்டே ன்னு சொல்லித் தர்றோம் ....ஒன்னு, ரெண்டுன்னு சொல்றதுக்கு பதிலா ஒன், டூ ???

எத்தனை பேர் வழக்கு தமிழுக்கு பதிலா ஆங்கில உபயோகம் பெருமைன்னு நினைக்குறோம்

என் கிட்ட தமிழ் தெரிஞ்சவாங்க யாராது ஆங்கிலத்துல பேசின அப்டியே கேப்பேன்...ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்துல பேசுறீந்கன்னு...

என்னை நினைக்குறேங்க --".What do you think?....

"அப்டின்னு தான் நான் நினைக்குறேன்.... ".ya I think so... "..

பல்லு தேச்சுட்டு வரேன் - Brush pannittu varen

என் மனைவி- My wife

என் கணவர்- My husband

என் பொண்ணு- my daughter/ my kid

என் பையன் - my son/ my kid


தமிழ்ல தான் சொல்றேங்குரவங்க கை தூக்குங்க பார்க்கலாம் ..1, 2,...??...அவ்ளோ தானா?

ஒரு தடவை நடிகர் மாதவன் பேட்டி பார்க்கும் பொது அவரோட மனைவியயிம் மகனையும் குறிப்புட்டு சொல்லும் பொது அழகா என் மனைவி, என் மகன்னு அவர் சொனனது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்துச்சு....

எப்போவுமே நிறை குடம் தளும்பாது, குறை குடம் கூத்தாடும்குறது உண்மையா தான் போகுது....

ஏன் ஆஸ்கர் மேடையில ரஹ்மான் தமிழ்ல பேசனும்குறது கட்டாயமா....இல்லியே... மனுஷன் அழுறதுக்கும் சந்தோஷத்துக்கும் எப்டி அம்மா மடி தேடுறானோ அது மாதிரி தான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் தாய் மொழி..

என் அலுவலகத்த்தில கூட ரஹ்மானை சிலர் தூற்ற தான் செஞ்சாங்க....ஏன் ஹிந்தி-ல பேசிருக்கலாமேன்னு....மேல சொன்னது தான் என்னோட பதிலா இருந்துச்சு...

முதலில் நான் ஒரு தமிழன் அப்புறம் தான் இந்தியன்...

இங்க வெளி நாடுகள்ல இரு மாதிரியான குழப்பம்..

1. ஒன்னு, பிள்ளைக்கு வீட்ல தமிழ் சொல்லி குடுத்தா பள்ளிக்கூடம் போனதும் கஷ்டப்படுவாங்களே....அப்படின்னா வீட்ல ஆங்கிலம் பேசுவதா?

2. இன்னொன்று , சிறு பிள்ளைங்க எப்டியும் நெருப்பு மாதிரி புடிசுக்குவாங்க......அதுனால பள்ளிக்கூடம் போறப்போ ஆங்கிலம் கத்துகிட்டா போதும் .... இப்போ தமிழ் சொல்லி தரலைன்னா ஊர்ல இருந்து தாத்தா பாட்டி தொலை பேசில பேசினா கூட புரியாம தெரியாம முழிப்பாங்க....அப்புறம் குடும்பம்னா என்னன்னே மறந்து போயிடும்.....என்ன எல்லாம் பிரச்னை பாருங்க

மக்களே...எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? ஒவ்வொரு நாளும் படுக்க போகும் போது இன்னிக்கு எத்தனை ஆங்கில வார்த்தைகள் உபயோகிச்சோம்..அதுல எதை தவிர்த்து தமிழ் வார்த்தைகள் உபயோகம் செய்திருக்கலாம்...அப்டி செஞ்சா தமிழ் வழக்கொழிந்து போகாமல் இருக்குமான்னு ஒரு கணம் யோசிப்பீங்களா? தயவு செஞ்சு முயற்சி பண்ணுங்க...


என்னோட இரண்டு நயா பைசாக்கள் : [ My 2 cents !!]

வெள்ளணை = விடியல் காலை

வானவெளி = வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய பகுதி...சூரிய வெளிச்சம் படும் படியாக இருக்கும்.....கூரை இருக்காது


என்ன ? பொன்னாத்தா சொல்றது சரி தானே?

நான் வம்புக்கு இழுக்குறது ..

கண்ட நாள் முதலாய் Truth

என்றும் சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு !!

பொன்னத்தா

Sunday, February 22, 2009

Way to Go India!!


....இந்தியாவுக்கே பெருமை வாங்கி தந்த ரஹ்மானுக்கு ஒரு பெரிய ஓஓஓ என்ன ஒரு சந்தோசம்....அப்பா...என் கால் தரைல நிக்கல....எனக்கே இப்டி இருந்துச்சுன்னா அவங்க குடும்பத்தில எல்லாரும் எப்டி குதிச்சுருப்பங்க?


திறமை என்னிக்குமே வீண் போகாதுங்குறது உண்மை தானே?


வேற எந்த ஊர்ல அயல் நாட்டுகாரங்களை கூப்டு விருது குடுக்குறாங்க....இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் பார்க்க முடியும்


நல்ல முறையில் தகுந்தவர்களை தேர்வு செய்ததற்கு ஆஸ்கர் அகேடமிக்கும் நன்றி நன்றி
ஏங்க..வேற யாரவது ஒரே வருஷத்துல ரெண்டு ஆஸ்கர் வங்கிருக்கங்களா ..இல்ல தானே?....அப்போ ரெட்டை மடங்கு சந்தோசம்....


இந்த நல்ல வாய்ப்பை குடுத்ததற்கு டைரக்டர்க்கும் நன்ற சொல்லணும்....


ஐயோ...என்ன என்னமோ சொல்லனும்னு இருக்கே...என்ன எழுதுறதுன்னு தெரியலியே


வாழ்த்துக்கள் ரஹ்மான்.....வாழ்த்துக்கள் இந்தியா

Thursday, February 19, 2009

என்னை கவர்ந்த ஆத்மா யார்?

என்னோட அலுவலகத்தில என்னோட டீம் 18 பேர் கொண்ட டீம். எல்லாருமே ஓரளவுக்கு இளம் வயது தான். எப்போவுமே ஏதோ ஒரு டீம் activity இருந்துட்டே இருக்கும்.

ஒரு நாள் ஒரு meeting நடந்துகிட்டு இருந்தப்போ, உங்களை மிக கவர்ந்த மனிதர் யார்னு எல்லாரும் சொல்லனும்னு சொல்லிட்டாங்க....எப்போதும் போல என் மேலாளர்...பொன்னாத்தா எல்லார் பேரையும் போட்டு அவங்களுக்கு யாரை பிடிக்கும்.ஏன் பிடிக்கும்னு எழுதுன்னு சொல்லிட்டார்...
எப்போவுமே எனக்கு தான் இந்த வேலை வரும்னு தெரிஞ்சாலும் பெரிய பகுமான கோழி மாதிரி பேனா பேப்பர் எடுக்காம தான் போவேன்....அவசர அவசரமா பேனா பேப்பர் ஒசி வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது...ஆஹா நம்ம வாய்ப்பு வரும் போது நாமளும் ஒரு ஹீரோ பேரு சொல்லனுமே...யாரு நம்ம ஹீரோன்னு மண்டைய குடைய ஆரம்பிச்சேன்...

ஒரு சிலர் யோசிக்க அவகாசம் கேட்டு pass சொல்லி அப்டி இப்டின்னி என் முறை வந்துடுச்சு....இருந்த கூட்டத்தில பாதிக்கும் மேல சொன்ன பெயர் "பராக் ஒபாமா ".....என் பேர் சொன்னதும் , டக்னு நான் சொன்னது இந்திரா காந்தி....நான் பள்ளிகூடம் சேர்ந்த புதுசுல இந்திரா காந்தி சுட்டு கொன்னுட்டங்கன்னு ஸ்கூல் விடுமுறை விட்டதும் சந்தோஷமா தான் வீட்டுக்கு போனேன்...ஆனா தீவிர காங்கிரஸ்வாதியான என் தாத்தா பட்ட வருத்தத்தையும், ஆத்திரத்தையும் பார்த்து தான் எனக்கு இந்திரா காந்தி ரொம்ப முக்கியமானவங்க போல இருக்குன்னு புரிஞ்சது....

சத்தியமா எனக்கு இந்திரா காந்தி பற்றி பெரிசா எதவும் தெரியாது.....ஆனா என்னை பொறுத்த வரைக்கும் ஒரு தைரியமான பெண். அவங்களோட ஒளி நகல்கள் பார்க்கும் போது...எவ்ளோ தைர்யமா இவ்ளோ ஆண் மக்களுக்கு நடுவில தலை நிமிர்ந்த நிக்குறாங்களேன்னு இப்போ மட்டும் இல்லை, அந்த விவரம் புரியாத வயசுலேயே நினச்சுருக்கேன்....

அப்போ இருந்து இப்போ வரைக்கும் எங்கயும் யாராவது ஒரு பெண் சாதனை செஞ்சா ஒரு கணம் மனசால அவங்களை வாழ்த்துறது உண்டு...
இந்திரா காந்தி மாதிரி வரணும்னு நினச்துனாலயோ என்னவோ இது வரைக்கும் வாழ்கையில எதுக்கும் பயந்தது இல்லை....
இந்திரா நூயி, காண்டலிசா , புராண காலத்தில அதிதி , ஜான்சி ராணி, இவங்க எல்லாம் தான் என்னை கவர்ந்தவர்கள்....

உங்களை கவர்ந்தவர்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது....


டாக்டர்
தேவா
என் மகராசி நிலா
என் தம்பி IRAPEKE
Will to Live ரம்யா

விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும் ...

வாழ்க பதிவர் பனி, வளர்க எம் கூட்டம்
பேரு வச்ச ஆத்தா பொன்னாத்தா