Sunday, March 01, 2009

நிலவில் ஒரு நாள்!!

நேரம் : நள்ளிரவு
ஆழ்ந்த நித்திரை
தீவிரமான நிசப்தம்

டொக் டக் டொக் டக்
நித்திரைக் குதிரை என் வீட்டு வாசலில்

என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..
எனை விட்டு மெதுவாக
என் மேனி நோகாமல் பிரிந்து எழுந்தது.
என் கண்கள் திறக்காமல் திறந்தன.

ஆத்மா (எ) ஆவிக்கு "நான்" என்றும்
நித்திரை குதிரைக்கு "கனவு" என்றும் பெயர் சூட்டப் பட்டது.


நான் நடந்து கனவிடம் சென்றேன்.
கனவு கேட்டது .."எங்கு உன்னை இட்டுச் செல்லட்டும்"
நான் சொன்னேன் " நிலவிற்கு"

கனவு குனிந்து அதன் மேலேறச் சொல்லி சமிக்ஞை செய்தது.
என்னை மேலேற்றியது காற்றா கனவா தெரிய வில்லை
இப்பொழுது கனவின் முதுகில் நான்

பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்

மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள்
கண் சிமிட்டியபடி

நிலவு சேர்ந்து விட்டோம்
தெருவெங்கும் பாலாறாய் நிலவு வெளிறிப் போய்.

எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு பசியாற்றலாம் - நினைத்தேன் நான்

வெள்ளை ரோஜா தவிர வேறெதற்கும் அனுமதி இல்லை போலும்
எங்கெங்கும் வெள்ளிப் பூக்களாய் வெள்ளை ரோஜாக்கள்

நான் இறங்கி நடந்தேன்..
இல்லை இல்லை கனவுடன் பாலாற்றில் மிதந்தேன்.

அவ்வளவும் அழகாய் கண் விரிய வைக்கும்
ஆச்சர்யமாய்.

எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் தெரிய வில்லை.
மயக்கம் தெளிந்தவளாய்
ஒரு கணம் நின்றேன். ஏதோ யோசனை
கீழே குனிந்து பார்த்தேன்
பூமிப் பந்து பிரகாசமாய்.

மனதுக்குள் சுருக்கென்று சோகம்.

சட்டென்று நிலவு வெறுத்து விட்டது

திரும்பி நடை போட்டேன்...இம்முறை மிதக்க வில்லை... நடந்தேன்..

கனவு கேட்டது..."என்ன ஆயிற்று"
நான் சொன்னேன் .." நிலவு வெறுத்து விட்டது"
கனவு புருவம் தூக்கிய படி "என்ன? "
நான் : "ஆம் நிலவு ஒரு வெற்று
நிலவு ஒரு போலி
நிலவு ஆடம்பரம்"
நிலவில் அன்பில்லை"

கனவு ." ஏன்...என்ன இல்லை நிலவில்?"
நான் : "மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
பாலாறாய் சாலைகளும்
வெள்ளியாய் பூக்களும்
வேண்டாமே எனக்கு "

கனவு " என்ன ..இந்த ஆடம்பரம் வேண்டாமா? வேறென்ன வேண்டும் உனக்கு"

நான் " எனை உற்றவன் இங்கில்லை
என் உடன் பிறந்தவள் உடனில்லை
எனக்கு உயிர் குடுத்தவரும் காண வில்லை
என்னிடம் உயிர் பகிர்ந்தவளும் அருகிலில்லை
நிலவில் அன்பும் இல்லை; அரவணைப்பும் இல்லை "


கனவு தலை குனிந்து அமைதி காத்தது

நான் நடையைத் தொடர்ந்தேன்
கனவு விரைந்து முன் வந்து குனிந்து ஏறச் சொன்னது

பறந்து விரைந்தோம்.

டொக் டக் டொக் டக்
கனவுக் குதிரை செல்லும் சத்தம்
என் உடம்பை எதுவோ ஆட்டியது
கண்களை இம்முறை மெய்யாகவே திறந்தேன்
எனக்கு உயிர் தந்த தாய் பாலுடன் பௌர்ணமியாய்.

வாசல் வந்தேன் என் உடன் பிறந்தவள்
நட்சத்திரங்களை கோலமாக்கியபடி.

பின்னாலிருந்து என்னைக் கட்டிப் பிடித்தபடி
என் உயிர் பகிர்ந்த வெள்ளை ரோஜா

அண்ணார்ந்து பார்த்தேன்.
நிலவு போய் சூரியன் சிரித்தான்

நானும் சிரித்தபடி எத்தனித்தேன்
நிஜமான நினைவுகளுடன் பிரயாணிக்கத் தயாராய்


நினைவுகளுடன்
பொன்னாத்தா !!

22 comments:

Arasi Raj said...

சொல்ல மறந்துட்டேன்....

நான் இப்போ கனவுல இருந்து வந்து சேர்ந்தது தாய் வீட்டுக்கு...அதுனால உற்றவர் இங்கும் இல்லை... ஹி ஹி

தேவன் மாயம் said...

என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..
எனை விட்டு மெதுவாக
என் மேனி நோகாமல் பிரிந்து எழுந்தது.
என் கண்கள் திறக்காமல் திறந்தன.//

எழுத்து அருமை!!!

தேவன் மாயம் said...

னவு குனிந்து அதன் மேலேறச் சொல்லி சமிக்ஞை செய்தது.
என்னை மேலேற்றியது காற்றா கனவா தெரிய வில்லை
இப்பொழுது கனவின் முதுகில் நான்

பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்///

அருமையான பயணம்!! நானே குதிரையில் பறப்பதுபோல் இருந்தது!!

தேவன் மாயம் said...

நிலவு சேர்ந்து விட்டோம்
தெருவெங்கும் பாலாறாய் நிலவு வெளிறிப் போய்.

எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு பசியாற்றலாம் - நினைத்தேன் நான்///

பாலை புடிச்சு கொண்டாந்து இருக்கலாம்!

தேவன் மாயம் said...

நான் இறங்கி நடந்தேன்..
இல்லை இல்லை கனவுடன் பாலாற்றில் மிதந்தேன்.

அவ்வளவும் அழகாய் கண் விரிய வைக்கும்
ஆச்சர்யமாய்.

எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் தெரிய வில்லை.
மயக்கம் தெளிந்தவளாய்
ஒரு கணம் நின்றேன். ஏதோ யோசனை
கீழே குனிந்து பார்த்தேன்
பூமிப் பந்து பிரகாசமாய்.///

கற்பனையின் உச்சம்!!

நட்புடன் ஜமால் said...

அட நல்லாயிருக்கே!

நட்புடன் ஜமால் said...

நிலாவும் அம்மாவும் said...

சொல்ல மறந்துட்டேன்....

நான் இப்போ கனவுல இருந்து வந்து சேர்ந்தது தாய் வீட்டுக்கு...அதுனால உற்றவர் இங்கும் இல்லை... ஹி ஹி\\

இது வேறயா ...

ஆதவா said...

ஏதோ ஒரு கற்பனாவாதி தேர்ந்த எழுத்தாளர் எழுதிய எழுத்தை உங்கள் வலையில் படித்ததைப் போன்ற பிரமை!1! அந்த கனவோடு நானும் சென்றதைப் போன்ற உணர்வு!!

ம்ம்ம்....... நான் கொஞ்சம் எட்டி நின்று பார்த்துக் கொள்கிறேன்....

அருமை அம்மாஅ!!!

நாகராஜன் said...

நிலவில் ஒருநாள் மட்டும் தானா? இப்படி போக முடிந்தால் நான் தினமும் போக தயார். ஆனால் நீங்க சொன்ன மாதிரி, என்னை பிடித்தவர்களையும், எனக்கு பிடித்தவர்களையும் விட்டு விட்டு போக எனக்கும் விருப்பம் இல்லை...

உங்களுடைய வார்த்தை உபயோகம் அருமைங்க... பாராட்டுகள்... மேலும் இது போல நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

பால் வெளியில், நிலவில் எங்கே பார்த்த போதும் வெறும் பாலாகவே தெரியினும், அது எத்தனை பேர் பசியை போக்கினும், எங்கே பார்க்கினும் வெறும் வெள்ளை ரோஜாவாகவே இருப்பினும், கனவில் மட்டுமே போக சம்மதம். நினைவில் போக விருப்பம் இல்லை...

Arasi Raj said...

என்னது....ஏதோ ஒரு கற்பனாவாதியா....ஆதவா...அது நாந்தேன் நாந்தேன் ...

இப்டி மனசை உடச்சு போட்டீகளே....

Arasi Raj said...

வாங்க ராசுக் குட்டி...நல்ல இருக்கீகளா.....அப்டியே சிவப்பு ஜிப்பாவும், புலி நகம் வச்சி சங்கிலியும் கை நிறைய மோதிரமும் தான் நினைவுக்கு வருது....

என்னிக்காவது கனவு நம்மளை சந்தோஷமா வச்சுருக்கா..கனவுல கூட அய்யய்யோ அது இல்லியே..இது மறந்துட்டேனேன்னு தான் யோசிச்சுருக்கேன்...

எல்லாரையும் கூட்டிட்டு போனாலும்...பூமி பூமி தான்...நிலவு நிலவு தான்

புன்னகை said...

//என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..//
நிலாம்மா ஒரு சின்ன சந்தேகம்! ஆத்மாவும் ஆவியும் வேறா என்ன???

ஹேமா said...

பொன்னாத்தா (எ)சண்டைக்கோழி...
வித்தியாசமாய் ஒரு தளத் தலைப்...பூ.ரசித்தேன்.

//பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்///

கனவு அழகாய் விரிந்திருக்கு

RAMYA said...

ஆஹா அருமை, நல்லா விவரமா ஒரு பதிவு பயமா, இல்லே ஆத்மாவோட சஞ்சாரமா தெரியலை?

எனக்கு எங்கோ போற மாதிரி இருக்கு
மிகத்தெளிவா எழுதி இருக்கிறீங்க
அழகு எழுத்து நடை, வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

//
சொல்ல மறந்துட்டேன்....

நான் இப்போ கனவுல இருந்து வந்து சேர்ந்தது தாய் வீட்டுக்கு...அதுனால உற்றவர் இங்கும் இல்லை... ஹி ஹி

//

இதுதான் உங்க பஞ்ச் !!

RAMYA said...

Hi madam,

நலம் நலமறிய ஆவல்

http://www.valpaiyan.blogspot.com/
============================

இந்த லிங்க்லே இன்னைக்கு என்னோட interview படிங்க. கருத்து சொல்லுங்க.


அன்புடன்
ரம்யா

Arasi Raj said...

ஹேமா, நீங்க என்னிக்காவது என் பதிவு வந்து பார்க்க மாட்டேங்களான்னு நிறைய நான் யோசிச்சுருக்கேன்....உங்கள் எழுத்துக்கு முன்னாள் நாங்க எல்லாம் ரொம்ப சின்னவங்க...

அப்டியே இலங்கைத் தமிழ் விளையாடுமே உங்கள் மூச்சு காற்றில்.....
நன்றி மீண்டும் வருக

Dii said...

ஆழகு கனவு ...
ரொம்பவும் ரசனையானதும் கூட
நானே நிலவு போன சுகம்..தந்தது உங்க பதிவு
ம்ம்,,அப்பறம் உற்றவர் அங்கில்லையா..?ன்னு கேட்கலாம்ன்னு பார்த்தா பின்னுட்டத்தில்ல இருந்தது உங்க பதில்..

உறவுகள் இல்லாத வாழ்க்கை...பூவில்லாத சோலை,..நீர் ஒடாத ஓடை,..நெட் access இல்லாத ஆஃபிஸ் ;) :)))

கலக்குங்க பொன்னாத்தா

Raich said...

நிலாமா
உங்களுடைய பலோக நான் இது தான் முதல் முறையா படிக்கிறேன்.
அருமை. ரொம்ப அற்புதமா எழுதிருக்கீங்க
சின்ன வயசுல ஆகாயத்துல பறகற கனவெல்லாம் கண்டிருக்கேன்.
அதெல்லாம் நினைவுக்கு வருது.
உங்க எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

Arasi Raj said...

Thank you Raich.

Ruyaj said...

பொன்னாத்தா, ஒரு நல்ல கவிதை எழுதி என்னை inspire பண்ணி கருத்து கடன் குடுத்ததற்கு நன்றி. உங்க கவிதையின் அதே தீம்-ல நான்
எழுதின கவிதை இங்கே.

Deepan Saravana said...

நான் " எனை உற்றவன் இங்கில்லை
என் உடன் பிறந்தவள் உடனில்லை
எனக்கு உயிர் குடுத்தவரும் காண வில்லை
என்னிடம் உயிர் பகிர்ந்தவளும் அருகிலில்லை
நிலவில் அன்பும் இல்லை; அரவணைப்பும் இல்லை "....

பின்னிட்டீங்க போங்க.... உற்றவன் ,உடன் பிறந்தவள், உயிர் குடுத்தவரும், உயிர் பகிர்ந்தவளும்... வார்த்தைகளை கையாள்வதில் தேர்ந்த நளினம் தெரிகிறது...